பத்தனம்திட்டா(கேரளா): நாளை டிச.6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடைபந்தல், பம்பை, கோயில் சந்நிதானம் உள்ளிட்ட நான்கு இடங்களில் மெட்டல் டிடெக்டர் சோதனைக்குப் பின்னரே பக்தர்கள் கோயிலில் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.
வழக்கமாக கோயிலில் 1750 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் விதமாக 100 அதிவிரைவு காவல் படையினர் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோயிலுக்கு வரும் பக்தர்களின் நடவடிக்கைகள் முழுமையாக 88 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் இருமுடி மற்றும் பை உள்ளிட்ட அனைத்தும் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகிறது.
கோயிலில் பக்தர்களுக்கு செல்போன் உள்ளிட்டவை தடை செய்யப்பட்ட நிலையில், தற்போது கோயிலின் அருகில் உள்ள இடங்களிலும் செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டிரோன் கேமராக்கள் மூலமாகவும் தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வெடிகுண்டு நிபுணர்களும் அடிக்கடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிரடிப் படையின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரி ஹரி நாயக் தலைமையில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு இந்த உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடரும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: டிச.7ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!