இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் இன்று (நவ.18)தேனியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாட்டில் இந்து மதத்தைச் சேர்ந்த பட்டியலினத்தவர்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசு வேலைக்குச் சேர்ந்த பிறகு சிலர் வேற்று மதம் மாறியுள்ளனர். அவ்வாறு மாறியவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களுக்கும் புகார் மனு அளிக்க உள்ளோம்.
கரோனா நோய்த்தொற்றை காரணம் காட்டி கேரள மாநில அரசு மற்றும் சபரிமலை தேவஸ்தான போர்டு நாளொன்றுக்கு 2000 பக்தர்கள் எனவும், மகர விளக்கு பூஜைக்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை தரிசனம் செய்வது தடைப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் தனது மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில், ஜனவரி மாதம் அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பதாகக் கூறியுள்ளார். அவரது அரசியல் அறிவிப்பிற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருக்கு ஆதரவாக செயல்படுவோம். ஒரு வேளை அவர் கட்சி தொடங்காவிட்டால் தமிழ்நாட்டில் ஆன்மிக அரசியலை ஏற்படுத்துவதற்காக அனைத்து தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி போட்டியிடும்" என்றார்.
இதையும் படிங்க: மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் தொடர்ந்து குளறுபடி, உரிய நடவடிக்கை வேண்டும் - திருமாவளவன்