சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா கடந்த 27ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து விடுதலைசெய்யப்பட்டார்.
இதனிடையே உடல் நலக்குறைவால் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் சசிகலாவை வரவேற்க அமமுகவினர் தீவிர ஏற்பாடுகள் செய்துவருகின்றனர். சசிகலாவின் விடுதலையை வரவேற்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவைச் சேர்ந்த சிலரும் ஆதரவு சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில், சசிகலாவை வரவேற்று அதிமுக நிர்வாகி ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. ஜி. உசிலம்பட்டியைச் சேர்ந்த சின்னராசா என்பவர் ஆண்டிபட்டி ஒன்றிய அதிமுக இளைஞரணித் தலைவராகப் பதவி வகித்துவருகிறார்.
தொடக்கத்தில் அமமுக பிரமுகராகச் செயல்பட்டுவந்த இவர், கடந்த சில வருடங்களுக்கு முன் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். தற்போது அதிமுகவில் இருந்துகொண்டு மீண்டும் சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டியுள்ளதால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்தச் சுவரொட்டியில், "தமிழ்நாட்டைச் வழிநடத்த வருகைதரும் அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் தியாகத்தின் மறு உருவம் எங்களின் ராஜமாதாவே! வருக! வருக! என்று அச்சிடப்பட்டுள்ளது. சசிகலாவை வரவேற்று துணை முதலமைச்சரின் மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள ஆதரவு சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க...எங்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் - மன்னர் திருமலை நாயக்கரின் 15-ஆம் வாரிசு அசோக் ராஜா