தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் திட்டம் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இதையடுத்து மாவட்டந்தோறும் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி போடி தொகுதியில் 7இடங்களிலும், டிசம்பர் 18 ஆம் தேதி கம்பம், ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய தொகுதிக்குட்பட்ட 6 பகுதிகள் என மொத்தம் 13 இடங்களில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தால் மினி கிளினிக்கள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், இரண்டாவது கட்டமாக இன்று போடி தொகுதிக்குட்பட்ட சீலையம்பட்டி, தர்மாபுரி, குப்பிநாயக்கன்பட்டி, வெங்கடாசலபுரம், தாடிச்சேரி மற்றும் அரண்மனைப்புதூர் ஆகிய 6 இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்குகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
அங்கு, மகப்பேறு காலங்களில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசால் வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகங்களை அவர் வழங்கினார். மேலும் சீலையம்பட்டி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் துணை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்வுகளில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: தேமுதிகவின் குப்பைகளை சுத்தம் செய்கிறார் ஸ்டாலின் - விஜய பிரபாகரன் தாக்கு!