உலகையே ஆட்டிப்படைக்கும் கொடிய நோயான கரோனாவை விரட்ட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் அரிசி, காய்கறி, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் தவிர்த்து மற்ற அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.
பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க கோயில் திருவிழாக்கள், பண்டிகைகள் என அனைத்து நிகழ்வுகளும் தடைசெய்யப்பட்டன. தொடரும் ஊரடங்கு உத்தரவால் கூலித் தொழிலாளர்கள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை வருமானமின்றி உள்ளனர்.
இந்நிலையில், பூக்களின் தேவை இல்லாததால் நன்கு வளர்ந்துள்ள பூக்களை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, அணைக்கரைப்பட்டி, கன்னியப்பிள்ளை பட்டி, மொட்டனூத்து, ராஜதானி, வைகை புதூர், லட்சுமிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 200 ஏக்கருக்கு அதிகமாக பூக்கள் சாகுபடி நடைபெறுகிறது.
மல்லி, கனகாம்பரம், அர்லி, சாமந்தி, கோழிக்கொண்டை, சம்மங்கி, சென்டுப்பூ உள்ளிட்ட பல்வேறு ரக பூக்கள் பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் பூக்கள், ஆண்டிபட்டி, தேனி, சீலையம்பட்டி, மதுரை உள்ளிட்ட சந்தைகளுக்கு அனுப்பப்படுகின்றன.
பொதுவாக பங்குனி, சித்திரை மாதங்களில் கோயில் திருவிழாக்கள் கொண்டாடப்படுவதால் பூக்களின் தேவை சற்று அதிகரித்து விலையும் கூடுதலாக இருக்கும். இதனால் பூக்கள் அதிகப்படியாக தேவைப்படும். ஆனால் தற்போது கரோனா பீதியால் ஊரடங்கு பிறபிக்கப்பட்டதால் பூக்கள் சாகுபடி நலிவடைந்து வீழ்ச்சி அடைந்துள்ளது.
இது குறித்து ஆண்டிபட்டி பகுதி சென்டுப்பூ விவசாயி நாகபாண்டி கூறுகையில், பூக்கள் விதையாக நடவுசெய்து, மருந்து அடித்தல், உரமிடுதல், களை எடுத்தல் ஆட்கள் கூலி என ஏக்கருக்கு ரூ.50ஆயிரம் வரை செலவாகின்றன. இந்த வகையான சென்டுப்பூக்கள் மாலை கட்டுவதற்குதான் அதிகம் பயன்படும். தற்போது கோயில் திருவிழாக் காலம் என்பதால் அதிகம் சாகுபடி செய்திருந்தோம்.
இரண்டு மாத பராமரிப்பிற்கு பிறகு பூக்கள் பூத்து முதல் எடுப்பிற்கு தயாராகி உள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவால் திருவிழாக்கள் தடைபட்டு, கோயில் வழிபாடுகளும் நிறுத்தப்பட்டன. இதனால் பூக்களின் தேவை இல்லாமல் போய்விட்டது. நன்கு வளர்ந்து பூத்துக்குலுங்குகின்ற பூக்களை பறிக்காமல் விட்டு விட்டோம். தொடர்ந்து இந்த மாதம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதால் ஆடு, மாடுகளுக்கு பூக்களை உணவாக்கி வருகின்றோம். எனவே பூ விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என வேதனையுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவு: விவசாய பணிகள் தொய்வால் விவசாயிகள் கவலை!