தேனியில் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 7 ஆயிரத்தை மாற்றித்தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள்விடுத்த மாற்றுத்திறனாளி.
![மோடியின் பண மதிப்பிழப்பு சேமிப்பு பணத்தை இழந்த மாற்றுத்திறனாளி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tni-02-physicaly-challeged-person-request-collector-thousand-rupees-script-tn10035_04012021145626_0401f_01516_408.jpg)
![மோடியின் பண மதிப்பிழப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10114479_modi.jpg)
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நள்ளிரவு முதல் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளைப் பண மதிப்பிழப்பு செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து, பொதுமக்களிடம் இருக்கும் பழைய 500, 1000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 2016 டிசம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது.
அதனைத் தொடர்ந்து பணமதிப்பிழப்புச் செய்யப்பட்ட தாள்களை இருப்புவைத்திருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில் தேனியில் உள்ள மாற்றுத்திறனாளி ஒருவர், தான் சேமித்துவைத்திருந்த பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றித்தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ் (50). காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர், தனது மனைவி பஞ்சவர்ணம், இரு பிள்ளைகளுடன் வசித்துவருகிறார். இவருக்குத் தமிழ்நாடு ஊனமுற்றோர் நல வாரியத்திலிருந்து மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இவ்வாறு உதவித்தொகையாகப் பெறப்பட்ட பணம் ரூபாய் 7 ஆயிரத்தை பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதுகூட தெரியாமல் நாகராஜன் சேமித்துவைத்திருந்திருக்கிறார். தற்போது அதனைக் கண்ட அவரது மனைவி நாகராஜனிடம் பணமதிப்பிழப்பு குறித்து விளக்கியிருக்கிறார். இதனையடுத்து 7 ஆயிரத்தை மாற்றித்தருமாறு ஆட்சியரிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இது குறித்து அவரது மனைவி பஞ்சவர்ணம் கூறுகையில், "காது கேளாத, வாய் பேச முடியாத தனது கணவர் கிடைக்கின்ற கூலி வேலை செய்துவருகிறார். பழைய ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அரசு அறிவித்த செய்தி ஏதும் அவருக்குத் தெரியாது.
உதவித்தொகையாகப் பெறப்பட்ட பணத்தை அவர் சேமித்துவைத்திருந்த விவரம் தற்போதுதான் எனக்குத் தெரியவந்தது. எனவே சேமித்த பணம் 7,000 ரூபாயை மாற்றித்தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள்விடுத்துள்ளோம்" என்றார்.