தேனி : நீட் தேர்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் ரசீத் கடந்த 7ஆம் தேதி தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆஜரான அவரை, 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
இதனிடையே வழக்கின் முக்கிய குற்றவாளியான ரசீத்தை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு சிபிசிஐடி காவல் துறையினர் மனு தாக்கல் செய்தனர். அதனை ஏற்ற நீதிபதி 3 நாள் விசாரணைக்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, 8ஆம் தேதி ரசீத்தை மதுரை அலுவலகத்திற்கு சிபிசிஐடி காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.
நீதிமன்றம் வழங்கிய விசாரணை அனுமதிக்குப் பின்னர், இடைத்தரகர் ரசீத் இன்று மீண்டும் தேனி நீதித்துறை நடுவர் மன்றத்தில் நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் சிபிசிஐடி காவல் துறையினரால் ஆஜர்படுத்தப்பட்டார்
வரும் 21ஆம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, ரசீத் மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மூன்று நாள் நடைபெற்ற விசாரணையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதற்கு ஆட்களை தயார் செய்வதற்காக குஜராத், பிஹார் மாநிலங்களில் ஏராளமான இடைத்தரகர்கள் செயல்படுவதாகவும், அவர்களின் மூலமாகத்தான் முறைகேடுகள் நடந்ததாக ரசீத் தெரிவித்ததாக சிபிசிஐடி தரப்பில் கூறப்படுகிறது. ரசீத் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் தொடர்புடையவர்களிடமும் விசாரணை நடத்த உள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இடைத்தரகர் ரசீத்தின் வாக்குமூலத்தை தொடர்ந்து நீட் தேர்வு முறைகேடு வழக்கில் இன்னும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கர்நாடக எல்லையில் தமிழ் பலகை சேதப்படுத்திய விவகாரம்: வட்டாள் நாகராஜ் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு