தேனி: திரைப்பட இயக்குநரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து நேற்று (செப். 8) காலை சென்னையில் டப்பிங் பணியில் இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரின் இறப்பு திரைத்துறையினர், சின்னத் திரைப் பிரபலங்கள் என பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
அதனை தொடர்ந்து மாரிமுத்துவின் உடல், சென்னையில் அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அப்போது அவருடன் சின்னத்திரை தொடரில் நடித்த நடிகர், நடிகைகள், திரைப்பட இயக்குநர்கள், திரையுலக பிரபலங்கள் என பலர் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் நடிகரும் இயக்குநருமான மாரிமுத்துவை நினைவு கூறும் வகையில் பதிவுகளை பகிர்ந்து வந்தனர். குறிப்பாக அவருடன் சின்னத்திரையில் பணியாற்றிய பிரபலங்கள் உருக்கமான பதிவுகளை பகிர்ந்து இருந்தனர்.
பின்னர் சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைத் தேரியில், அவரது உடல் தகனம் செய்யப்படும் என அறிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை ஆம்புலன்ஸ் மூலம் உடல் கொண்டு செல்லப்பட்டது. அதனை அடுத்து இன்று (செப். 9) காலை அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள பசுமலைத்தேரிக்கு அதிகாலை 6:00 மணி அளவில் அவரது உடல் கொண்டுவரப்பட்டது.
பின்னர் அவரது இல்லத்தில் உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு நடிகர் விமல், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள், உறவினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தனியார் தொலைக்காட்சியில் வரும் நாடகத் தொடரில், அவர் பேசும் வசனங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து இருந்தார். குறிப்பாக அவர் பேசும் வசனங்கள் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களாக அதிகம் பகிரப்பட்டன. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாரிமுத்துவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவரது ரசிகர்கள் வருகை தந்தனர்.
தொடர்ந்து பசுமலைதேரில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு, பின்னர் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நடிகரும் இயக்குநருமான மாரிமுத்துவின் இறுதி ஊர்வலத்தில் உறவினர்கள், ஊர் மக்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.