தேனி: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2004ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் இருந்தும் தினமும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும் வந்து சிகிச்சைப் பெற்று செல்கின்றனர்.
தற்போது இந்த மருத்துவமனையில் குழந்தைகள் வார்டு, அவசர சிகிச்சைப் பிரிவு (எண் 201) உள்ளிட்ட அறைகளில் பெரிய அளவிலான எலிகள் மற்றும் பெருச்சாளிகள் சர்வ சாதாரணமாக சுற்றித் திரிகின்றன. குழந்தைகள் வார்டு மட்டுமல்லாது அனைத்து நோயாளிகள் வார்டுகளிலும், பிரசவ வார்டுகளிலும் நூற்றுக்கணக்கான எலிகள் இரவு நேரங்களில் நோயாளிகள் வைத்திருக்கும் பழங்கள், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப்பொருட்களை தின்று வருகின்றன.
இவ்வாறு வரும் எலிகள், நோயாளிகளுக்கு அருகிலேயே இருக்கும் தின்பண்டங்களையும் உணவுப்பொருட்களையும் எடுக்கும் போது அருகில் உள்ள நோயாளிகளையும் கடித்துக் காயப்படுத்துகின்றன. ஏற்கனவே பல்வேறு நோய்களுக்காக சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளை அத்தோடு சேர்த்து எலிகடிக்கும் சேர்த்து சிகிச்சை பெறுவதும் வழக்கமாக உள்ளது. இதனால் இங்கு அனுமதிக்கப்பட்டு உள்ள நோயாளிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
குறிப்பாக, குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவில், பச்சிளம் குழந்தைகள் இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் எலிகள் தொல்லை அதிகமாக இருப்பதன் காரணமாக பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்களும் மிகுந்த அச்சத்தில் இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து குழந்தைகளை காத்து வருகின்றனர்.
மேலும், மருத்துவமனை வார்டுகளில், முறையாக சுத்தம் செய்யப்படுவது இல்லை என்றும், வார்டுகளில் உள்ள ஜன்னல் பகுதிகளில் கம்பி வலைகள் அமைக்காமல் திறந்த வெளியாக இருப்பதாலும் ஏராளமான எலிகள் பெருகி சுற்றித் திரிந்து வருகின்றன. இந்த நிலை குறித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் நோயாளிகள் புகார் கூறி உள்ளனர். எனினும், கடந்த பல மாதங்களாக எவ்வித நடவடிக்கையும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பில் எடுக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.
இந்த நிலையில் பச்சிளம் குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவு வார்டில் சர்வ சாதாரணமாக பெரிய எலி ஒன்று சுற்றித் திரியும் காணொலி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது. எனவே, தேனி மாவட்ட நிர்வாகமும், தமிழக சுகாதாரத் துறையும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து எலிகளின் தொல்லையை போக்கி நோயாளிகள் இரவில் நிம்மதியாக தூங்க வழி செய்ய வேண்டும் என நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் வலியுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: சைதாப்பேட்டையில் ஓடும் மின்சார ரயிலின் பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு