தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேவுள்ள மேகமலை வன உயிரின சரணாலய பகுதிக்குட்பட்ட மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, மகாராஜா மெட்டு, இரவங்கலாறு, வென்னியாறு உள்ளிட்ட 7 மலைக் கிராமங்களில் சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்களாக உள்ளனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி மணலாறு பகுதியில் விறகு சேகரிக்க சென்ற முதியவர் அமாவாசை என்பவரை காட்டு யானை தாக்கியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், மேல்மனலாறு பகுதியிலுள்ள தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புக்குள் நேற்று (டிச.23) நள்ளிரவு காட்டு யானை புகுந்து, அங்குள்ள வீடுகளை சேதப்படுத்தியுள்ளது. இதனால், சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த முத்தையா (52) என்பவரை காட்டு யானை தாக்கியதில் வீட்டு வாசலிலே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை, வனத் துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர், முத்தையாவின் உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வனத் துறையினர் உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: யானை தந்தங்களை கடத்த முயற்சி: ஆறு பேருக்கு சிறை!