தேனி: பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு, தென்கரை பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தீபக் ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பரான காமராஜ் ஆகியோருக்கும் இடையே முன்பகை இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஜூலை 2ஆம் தேதியன்று மாலை, தீபக் ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பரான காமராஜ் இருவரும் கஞ்சா மற்றும் மது போதையில் பிரபாகரன் வீட்டிற்கு அரிவாள் மற்றும் கத்தியுடன் சென்றுள்ளனர். அப்போது, பிரபாகரன் வீட்டில் இல்லாத காரணத்தால், அவரது தங்கை ஹேமலதா வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது கத்தியால் ஹேமலதாவின் உடையைக் கிழித்து, வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஹேமலதா பயத்தில், அவசர எண் 100-க்கு அழைத்து, தங்களது வீட்டில் இருவர் கத்தி மற்றும் அரிவாளுடன் தகராறு செய்வதாக புகார் தெரிவித்ததோடு, உடனடியாக தனது தாயை அழைத்துக் கொண்டு பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்த புகாரின் அடிப்படையில் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்திலிருந்து செந்தமிழன் மற்றும் தினேஷ் என்ற இரு போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விசாரணைக்காகச் சென்றுள்ளனர்.
அப்பொழுது தகராறில் ஈடுபட்ட தீபக் ரவிச்சந்திரன் மற்றும் காமராஜ் ஆகிய இருவரும், போலீசாரிடமும் தகாத வார்த்தைகளைக் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மட்டுமின்றி, ஒரு கட்டத்தில் காமராஜ் என்ற இளைஞர் அவரது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த அரிவாளை எடுத்து, விசாரணைக்கு வந்த போலீசாரைப் பார்த்து "வெட்டினால் தலை துண்டாக போய்விடும்" என மிரட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து, அங்கிருந்த அப்பகுதி மக்கள் அரிவாளை எடுத்து வெட்ட வந்த காமராஜரை தடுத்து நிறுத்தியதோடு, காவலர்களையும் அங்கிருந்து செல்லுமாறு அனுப்பி வைத்துள்ளனர். அதைத்தொடர்ந்து, காவல்நிலையம் திரும்பிச் சென்ற போலீசார் நடந்த சம்பவத்தை காவல் ஆய்வாளரிடம் தெரிவித்துள்ளனர்.
அதையறிந்த தென்கரை காவல்துறை ஆய்வாளர் ஜோதி பாபு மற்றும் காவலர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து, அங்கு போலீசாரைத் தகாத வார்த்தையில் திட்டியும், அரிவாளால் வெட்ட வந்த நபர்களை கைது செய்யச் சென்றனர். அந்த தகவலறிந்த காமராஜ் தப்பி ஓடிய நிலையில், தீபக் ரவிச்சந்திரன் என்ற இளைஞரை மட்டும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர், தீபக் ரவிச்சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தப்பி ஓடிய காமராஜ் என்ற இளைஞரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த காமராஜ், தீபாவளி பண்டிகைக்கு வீட்டிற்கு வந்துவிட்டு, வழக்கம்போல் வெளியூர் சென்று தலைமறைவாக இருந்ததாக அறியப்பட்டது.
இதனிடையே, போலீசாரை அரிவாளால் வெட்ட வந்த வழக்கில் தேடப்பட்டு வந்த காமராஜ், தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து, சின்னமனூர் சென்ற தென்கரை போலீசார், அவரைச் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின் பேரில் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: Theni News:விசாரணைக்கு சென்ற போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமிகள்!