தேனி: தேனி அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்ற கவுன்சிலரான இவரது வீட்டில் சிறுத்தையின் தோல் மொட்டை மாடியில் காய வைக்கபட்டு இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து வனத்துறையினர் துரைப்பாண்டியன் வீட்டுக்குச்சென்று பார்த்தபோது துரைப்பாண்டியன் வீட்டை பூட்டி தலைமறைவாகி விட்டார். பின்னர் வீட்டின் மேல் மாடிக்குச் சென்று பார்த்த போது அங்கே சிறுத்தையின் தோல் மஞ்சள் பூசி மொட்டை மாடியில் காய வைத்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மருத்துவர்களுக்குத் தகவல் அளித்தனர்.
முதல்கட்ட விசாரணைக்கு பின்னர் சிறுத்தையின் தோலை சுமார் ஒரு வாரத்திற்கு மேலாக மொட்டை மாடியில் காய வைத்து இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த சிறுத்தை எங்கே எப்போது யாரால் வேட்டையாடப்பட்டது? எதற்காக சிறுத்தையை வேட்டையாடி, அதன் தோலை மொட்டை மாடியில் காய வைத்து இருக்கிறார்கள்? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தலைமறைவான துரைப்பாண்டியனையும் தேடி வருகின்றனர். தேனியில் சிறுத்தையை வேட்டையாடி மொட்டை மாடியில் அதன் தோலை காய வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் சிறுத்தையின் தோலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சாலைப் பணிக்காக தோண்டிய போது எலும்புகள் கண்டெடுப்பு