தேனி: பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் வினோத் மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் மது அருந்திக்கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த 10 பேர் கொண்ட கும்பல் இருவரையும் கத்தி மற்றும் அரிவாளால் வெட்டி தாக்கியதில் ஜெகதீஸ்வரன் சம்பவ இடத்தில் பலியானார். மேலும் வினோத் என்பவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொலைக்கு காரணமான நபர்களை காவல்துறை இதுவரையில் கைது செய்யாமல் மெத்தனம் காட்டி வருவதாகக் கூறி, பலியான ஜெகதீஸ்வரனின் உறவினர்கள் கெங்குவார்பட்டியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் விவேகானந்தன் மற்றும் கார்த்திக் இருவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் குற்றவாளிகளை விரைவில் கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் கெங்குவார்பட்டி - வத்தலக்குண்டு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்தில் பெரியகுளம் மற்றும் தேனி காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:ஒரு கேக்குக்கு இவ்வளவு அக்கப்போரா: திருச்சியில் நடந்த திடுக்கிடும் சம்பவம்!