தேனி: பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் இரண்டாவது சகோதரர் ஓ.சண்முகசுந்தரம் ஆவார்.
ஓபிஎஸ் சகோதரர் சண்முகசுந்தரம் வாங்கிய இடத்திற்கு அருகே ஓய்வுபெற்ற மருத்துவர்களான திருமலை மற்றும் விமலா தம்பதியினர் அவர்களது வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஓபிஎஸ் சகோதரர் வாங்கிய இடத்தில் வீடு கட்டுவதற்காக, தன் இடத்தில் பள்ளம் தோன்றிய போது மருத்துவ தம்பதியின் வீட்டின் அஸ்திவாரம் சேதம் அடைந்ததாகக்கூறி மருத்துவ தம்பதிகள் தங்களது வீட்டினை சரி செய்ய வேலையாட்களை அனுப்பி வைத்தனர்.
அப்போது சண்முகசுந்தரம் அவர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தும் பெண் மருத்துவரை இழிவாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் ஓய்வுபெற்ற பெண் மருத்துவர் விமலா புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் ஓபிஎஸ் சகோதரர் சண்முகசுந்தரத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து ஓபிஎஸ் சகோதரர் சண்முகசுந்தரத்திடம் கேட்ட போது, அவர்களது இடத்தில் பணி செய்வதற்குத் தான் எந்த தடையாகவும் இருந்ததில்லை என்றும், அவர்கள் தன்னுடைய இடத்தை அபகரிப்பதற்கான நோக்கத்தில் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் புகார் கொடுத்துள்ளதாகவும், தானும் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும், இது தொடர்பாக நில அளவீடு செய்து அவர்களுடைய இடம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் எடுத்துக்கொள்ள தான் எப்போதும் தடையாக இருந்ததில்லை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:Video Leak:நகராட்சிப்பணியாளர்களிடம் வீட்டு வேலை வாங்கும் நகராட்சி ஆணையர்