கேரளா : இடுக்கி மாவட்டத்தில் ஆர்ச் வடிவில் கட்டப்பட்டுள்ள இடுக்கி அணை ஆசியாவிலேயே மிகப் பெரிய அணை ஆகும். இந்த அணையின் மொத்த உயரம் 550 அடியாகும். இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரிலிருந்து இடுக்கி மாவட்டம் மூலமட்டம் பகுதியில் உள்ள நீர் மின்நிலையத்தில் மின்சாரம் எடுக்கப்படுகிறது.
36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அணையின் மொத்த கொள்ளளவு 72 டிஎம்சி ஆகும். இடுக்கி அணையின் நீர்பிடிப்பு பகுதியில், கடந்த 10 நாட்களாக பெய்த கடும் மழையால் நீர்மட்டம் உயர்ந்தது. அதோடு, முல்லை பெரியாறு அணை திறக்கப்பட்டு பெரியாறு ஆறு வழியாக தண்ணீர் இந்த அணைக்கு வருவதால் நீர்மட்டம் மேலும் அதிகரித்துள்ளது.
இதனால் நேற்று 3 ஷட்டரும் திறக்கப்பட்டு 3700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து நீர்வரத்து அதிகம் இருப்பதால் 3 ஷட்டர் வழியாக காலையில் 7000 கன அடி திறக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்வரத்து அதிகமானதால் மேலும் 2 ஷட்டர்கள் திறக்கப்பட்டு 5 ஷட்டர் வழியாக தற்பொழுது 9 ஆயிரத்து 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதையடுத்து, பெரியாறு ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அணை திறக்கப்பட்டாலும் பெரியாறு கரையோரத்தில் உள்ள எந்த வீடுகளுக்கும் தண்ணீர் வராது என மாவட்ட நிர்வாகம் மதிப்பிட்டுள்ளது. இடுக்கி, கஞ்சிக்குழி, தங்கமணி, வாத்திக்குடி, உப்புத்தோடு ஆகிய கிராமங்களிலும் ஒலிபெருக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டன. இடுக்கி அணை திறப்பின் ஒரு பகுதியாக, எர்ணாகுளத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வைகை அணையில் இருந்து விநாடிக்கு 3ஆயிரம் கன அடி நீர் திறப்பு: விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!