தேனி: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், ஆகிய 5 மாவட்டங்களின் பாசனத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கிவருகிறது. வைகை அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பாசனத்துக்கு நீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
நடப்பாண்டில் வைகை அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளதை அடுத்து வைகை அணையிலிருந்து மதுரை திண்டுக்கல் மாவட்டங்களில் முதல் போக சாகுபடிக்கு பெரியாறு பிரதான கால்வாய் மூலம் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.
நீரை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர். தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் தொடர்ந்து 120 நாள்களுக்கு திறக்கப்படுகிறது . முதல் 45 நாள்களுக்கு வினாடிக்கு 900 கனஅடி தண்ணீரும் , அதற்கு அடுத்து 75 நாள்களுக்கு வைகை அணையின் நீர்த்தேக்கப்பகுதியில் உள்ள நீரின் இருப்பை பொறுத்து முறைப்பாசனம் வைத்தும் தண்ணீர் திறக்கப்படஉள்ளது.
தற்போது திறக்கப்பட்டுள்ள நீரை விவசாயிகள் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வைகை அணை நீர்மட்டம் தற்போது நிலவரப்படி 62.5 அடியாகவும் , அணையில் நீர் இருப்பு 4098 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
வைகை அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லை. தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மதுரை, திண்டுக்கல், தேனி, ஆகிய மூன்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: முல்லைப்பெரியாறு அணையிலிருந்து நீர் திறப்பு!