தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார், அ.ம.மு.க சார்பில் தங்கதமிழ்ச்செல்வன், காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் போட்டியிட்டனர்.
ரவீந்திரநாத்குமார் தரப்பில் அதிகம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் பல எழுந்தபோதும் எவ்வித பிரச்சனையும் இன்றி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது பல்வேறு குளறுபடிகள் ஏற்படலாம் என எதிர்கட்சிகள் சந்தேகமடைந்துள்ள சூழலில், திடீரென 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதையறிந்த காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சியினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், இந்த புதிய இயந்திரங்களை வைத்து வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடி செய்ய ஆளும் தரப்பு திட்டமிடுகிறது என்று குற்றம்சாட்டினர். அதற்கு விளக்கம் அளித்த அலுவலர்கள், சில இடங்களில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டால், அதற்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை என்பதற்காகவே இந்த நடவடிக்கை எனக்கூறினர்.
இதனை ஏற்க மறுத்த எதிர்கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோரும் வட்டாட்சியர் அலுவலத்தில் எதிர்கட்சினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.