தேனி மாவட்டம், பெரியகுளம், வடகரை அரண்மனைத் தெருவில் வசித்து வருபவர் கருணாகரன் (வயது 73). இவர் தேனி மாவட்ட சுகாதாரத்துறையில் இணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தற்போது, குழந்தைகள் நல மருத்துவராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு அவர் சென்றிருந்த நிலையில், அவரது வீட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தங்கம், வைரம், ரொக்கப்பணம் என ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து பெரியகுளம் வடகரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், பெரியகுளம் காவல் ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான தனிப்படையினர் கொள்ளையர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், பெரியகுளம் வடகரையில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த மூன்று பேரை காவல் துறையினர் பிடித்து விசாரித்ததில், மருத்துவரின் வீட்டில் கொள்ளையடித்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும், இந்தக் கொள்ளையில் மொத்தம் ஐந்து பேர் ஈடுபட்டதாகவும், அந்த பணத்தில் புதிதாக இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பெரியகுளத்தை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 23), சின்னத்தம்பி (வயது 22), ஜெரால்டு புஷ்பராஜ் (வயது 19), புவனேஸ்வரன் (வயது 20), சிபிராஜ் ஆகிய ஐந்து பேரை பெரியகுளம் வடகரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து, அவர்களிடமிருந்து சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள், பணம், டிவி, லேப்டாப், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் புதிதாக வாங்கப்பட்ட இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், கைது செய்த ஐந்து பேரையும் பெரியகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.