தேனி மாவட்டம் மேல்மங்கலத்தில் இருந்து வைகை அணை செல்லும் சாலையில் கடந்த 21ஆம் தேதி கொடூரமான முறையில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. இது குறித்து விசாரணை செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி 2 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.
பின்னர் இறந்தவர் திண்டுக்கல் மாவட்டம் விருவீட்டைச் சேர்ந்த ஆனந்தராஜ் (29) என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவருடைய தொலைபேசி எண்ணிற்கு வந்த அழைப்புகளின் அடிப்படையில், தேனி மாவட்டம் வடுகபட்டியைச் சேர்ந்த விஜயசாந்தி (20) என்ற பெண்ணை அழைத்து விசாரித்தனர்.
இதில் கொலை செய்யப்பட்ட ஆனந்தராஜ் - விஜயசாந்தி இருவரும் காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி விஜயசாந்தியை ஆனந்தராஜ் கர்ப்பமாக்கியதாக தெரிகிறது.
தொடர்ந்து விஜயசாந்தியை ஏமாற்றிவிட்டு உறவுக்கார பெண்ணை திருமணம் செய்ய ஆனந்தராஜ் திட்டமிட்டார். இதனால் ஆத்திரமடைந்த விஜயசாந்தி தனது சகோதரி வித்யா, உறவினர்கள் பிரபாகரன், ஆசைப்பாண்டி ஆகியோர் உதவியுடன் வடுகபட்டியில் வைத்து ஆனந்தராஜை கொலை செய்து உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து விஜயசாந்தி, வித்யா, பிரபாகரன், ஆசைப்பாண்டி ஆகிய 4 பேரையும் ஜெயமங்கலம் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: இரண்டு குழந்தைகளுடன் தண்டவாளத்தில் தலை வைத்து பெற்றோர் தற்கொலை!