கேரளாவில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பாதிப்புகளை அம்மாநில மக்கள் சந்தித்து வருகின்றனர். இதுவரை மழைக்கு 20 பேர் பலியாகி உள்ள நிலையில் நேற்று முன்தினம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு அருகேயுள்ள குண்டலை பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனிடையே மலை உச்சியில் இருந்து தொடங்கிய நிலச்சரிவு, குடியிருப்பு பகுதிக்கு முன்பே நின்றுவிட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த நிலச்சரிவில் 2 கடைகள், கோயில்கள் மற்றும் சில கால்நடைகளும், சில வாகனங்களும் மண்ணில் புதையுண்டன.
இந்த நிலையில் இதே இடத்தில் நேற்று (ஆக.6) இரவு மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. நேற்று முன்தினம் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகேயுள்ள பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக, இதில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்குள்ள 141 குடும்பங்களைச்சேர்ந்த 450 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மூணாறு அருகேயுள்ள கேப் ரோடு, தேசிய நெடுஞ்சாலைப்பகுதியில் நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டதனால், சாலை ஓரங்களில் இருந்த பெரும்பாறைகளும், மண்ணும் சாலையை மூடியுள்ளன. இந்த சாலையில் அந்த சமயத்தில் எந்த வாகனங்களும் செல்லாமல் இருந்ததால் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படவில்லை. இந்த பகுதியில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன.
இதனால், தொடர்ந்து மூணாறு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: முல்லைப்பெரியாறு; கேரளப்பகுதிக்கு கூடுதலாக 3,119 கன அடி நீர் திறப்பு!