மதுரை மாவட்ட ஆவினில் இருந்து கடந்தாண்டு தேனி மாவட்ட ஆவின் தனியாக பிரிக்கப்பட்டது. மேலும் இந்த ஆவின் நிறுவனம் தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, சின்னமனூர் உள்பட ஒன்பது தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 502 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் 5 பெண்கள், 3 பட்டியலினத்தவர்கள் என 17 பேர் இயக்குனர்களாக தேர்வு செய்யப்படுவர். தேனி ஆவின் தலைவராக துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்-ன் சகோதரரான ஓ.ராஜா நியமிக்கப்பட்டதிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.
அவரது நியமனத்தை எதிர்த்து பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த அம்மாவாசி என்பவர் தொடர்ந்த வழக்கில் ஓ.ராஜா உட்பட 17 இயக்குனர்களின் நியமனம் செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த ஜனவரி 30ஆம் தேதி பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் தேனி ஆவினின் இடைக்கால தலைவராக ஓ.ராஜா மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து வரும் மார்ச் 5இல் தேர்தல் நடத்தப்படும் என கடந்த 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று நடைபெற்றது.
தேனி என்.ஆர்.டி நகரில் உள்ள ஆவின் அலுவலகத்தில் ஓ.ராஜா உட்பட அதிமுகவைச் சேர்ந்த 17பேர் இயக்குனர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்தனர். அமமுக சார்பில் மூன்று பேர், சுயேச்சைகள் இருவர் என மொத்தம் 22 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெறும். மனுக்கள் திரும்பப் பெற கடைசி நாள் பிப்ரவரி 29. மேலும் அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, போட்டி உள்ள தொகுதிகளுக்கு மார்ச் 4இல் தேர்தல் நடத்தப்படும்.
அதனைத்தொடர்ந்து மார்ச் 5இல் வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினம் வெற்றி பெற்றபவர்கள் விவரம் அறிவிக்கப்படும். வெற்றி பெற்ற இயக்குனர்கள் கூடி மார்ச் ஒன்பதாம் தேதி தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பர். ஓ.ராஜாவின் நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அம்மாவாசி என்பவர் தற்போதைய தேர்தலில் போட்டியிடாததால் அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.