தேனி மாவட்டம் போடி அருகே சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜா, பூங்கொடி என்ற பூபதி, வைரம். மூவரும் 2012ஆம் ஆண்டு போடியிலிருந்து தேவாரம் நோக்கி சங்கராபுரம் வழியாக வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்தை நிறுத்தி மதுபோதையில் தகராறு செய்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் கல்லால் பேருந்தைத் தாக்கியதில் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது. இது குறித்து அரசுப்பேருந்து ஓட்டுநர் செல்வம் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போடி தாலுகா காவல் துறையினர் மூவரையும் கைதுசெய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.
இதனிடையே பிணையில் வெளியே வந்த மூன்றாவது குற்றவாளி வைரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இதுதொடர்பான விசாரணை தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
இந்நிலையில் நேற்று (டிசம்பர் 16) இவ்வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா, அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்து பொதுச் சொத்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக ராஜா, பூங்கொடி என்ற பூபதி ஆகிய இருவருக்கும் தலா ரூ.5,000 அபராதமும், 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஆறு மாத சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என உத்தரவிட்டார். இதையடுத்து குற்றவாளிகள் இருவரையும் தகுந்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறையில் அடைப்பதற்காக காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.