தேனியை அடுத்து ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரத்தைச்சேர்ந்தவர், பாரிஜாதம் (57). வெளிமாநிலங்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்லும் வழக்கம் கொண்ட இவர், கேத்ரிநாத், பத்ரிநாத் போன்ற இடங்களுக்குச்செல்வதற்காக தனக்குத்தெரிந்த நபர்கள் உதவியுடன் தொலைபேசி வாயிலாக சென்னையில் உள்ள 'சேதனம் டூர்ஸ்' நடத்தி வருபவருக்குத்தொடர்பு கொண்டுள்ளார்.
அதற்குத்தொலைபேசியில் பேசிய நபர் ஆன்மிக சுற்றுலா ரயில் மூலமாக அழைத்துச்செல்வதாகவும்; ஒரு இரயில் பெட்டியில் 72 நபர்கள் பயணம் செய்ய 72 நபர்கள் தேவை, மேலும் நபர் ஒருவருக்கு முன்பணமாக மூன்றாயிரம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து பாரிஜாதம் 109 நபர்கள் ஆன்மிக சுற்றுலாவிற்கு வரத் தயாராக இருப்பதாகவும் முன்பணமாக 90 நபர்களுக்கு 4 லட்சத்து 800 ரூபாயை இரு தவணைகளாக வங்கி மூலம் செலுத்தியுள்ளார். பின்னர் சம்பந்தப்பட்ட டூர் இரயில் டிக்கெட் பதிவு செய்யுமாறு கேட்டபோது மீதம் உள்ள 19 நண்பர்களுக்காக முன்பதிவு பணத்தையும் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளனர்.
பின்னர் பாரிஜாதத்தின் தொலைபேசி அழைப்பை 10 நாட்களுக்கு மேலாக ஏற்காமல் இருந்துள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாரிஜாதம் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்படும் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி அன்று புகார் அளித்தார்.
அதனடிப்படையில் விசாரணையைத்தொடங்கிய சைபர் க்ரைம் போலீசார் சென்னை சென்று, அங்கு தங்கி இருந்த வெங்கட்ராமன் (60) மற்றும் அவரது உதவியாளர் ஹேமமாலினி (49) ஆகிய இருவரையும் மதுரைக்கு வரவழைத்து, மதுரை ரயில் நிலையத்தில் கைது செய்தனர்.
பின்னர் தேனி அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் மும்பையை பூர்வீகமாக கொண்ட இருவரும் ஆன்மிக சுற்றுலா என்ற பெயரில் பலரிடம் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து நான்கு லட்சம் ரூபாய் ரொக்கம் 10-க்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டுகள், ஆறு செல்போன்கள் ஆகியவற்றை சைபர் க்ரைம் போலீசார் கைப்பற்றினர். பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர வரும் 5ஆம் தேதி முதல் நேரடி கலந்தாய்வு