தேனி: அரண்மனை புதூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அப்பெண்ணின் கணவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சிறுநீரகம் செயலிழந்ததன் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் அப்பெண், தனது மகன் மற்றும் மகளை திண்டுக்கல்லில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்க வைத்து படிக்க வைப்பதாவும், தேனியில் உள்ள தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் தனது தந்தையுடன் இணைந்து விவசாயம் மேற்கொண்டு, தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அப்பெண் கூறுகையில், "உயிரிழந்த எனது கணவரின் மாமா, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரியும், ஜோதிமணி. இவர் எனது கணவர் உயிரிழப்பதற்கு முன் அவரிடம் ரூ.2 லட்சம் கொடுத்ததாகக் கூறி என்னிடம் அந்த பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்து வந்திருந்தார்.
இது தொடர்பாக எனது கணவர் என்னிடம் எதுவும் கூறியதில்லை. இரண்டு லட்சம் வாங்கியதற்கான ஆதாரத்தை கேட்டபோது, அதனைக் காண்பிக்க அவர் மறுக்கிறார். ஆதாரம் இல்லாமல் இரண்டு லட்சம் வாங்கியதாகக் கூறி என்னை தகாத வார்த்தையில் திட்டி, ஒருமையில் பேசி வருகிறார். மேலும், நேற்று முன்தினம் எங்களது வயலில் விவசாயம் மேற்கொண்டு இருந்தபோது, அடியாட்களை வைத்து எனது ஆடைய இழுத்து என்னை மானபங்கப்படுத்தி அடித்து கொலை மிரட்டல் விடுத்தார்.
இதனால் காயம் ஏற்பட்டு, தற்போது தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன்” என தெரிவித்தார். இந்நிலையில் தன் தாயை அடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தங்களது குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் அப்பெண்ணின் 10 வயது மகன் தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.