நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாமில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியைப் பெறும் வீரர்கள், இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் உள்ள முகாம்களுக்குப் பணிபுரிய அனுப்பிவைக்கப்படுவர்.
கடின பயிற்சி முடித்த இளம் ராணுவ வீரர்களில் 60 பேர், பயிற்சி முடித்து, ராணுவ வீரர்களாய் பணிபுரிவதற்கான சத்தியப் பிரமாண நிகழ்ச்சி இன்று நடந்தது. பயிற்சிக்குச் செல்லும் ராணுவ வீரர்கள், பகவத்கீதை, பைபிள், குரான் புத்தகங்கள், தேசியக்கொடி மீது, உப்பு உட்கொண்டு சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
ராணுவ பேண்ட் இசைக்கேற்றவாறு ரெஜிமென்ட் கொடி, தேசியக்கொடியுடன் கம்பீரமான அணிவகுப்பு நடந்தது. எல்லையில், பணிக்குச் செல்லும் இளம் ராணுவ வீரர்கள் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த எம்.ஆர்.சி. துணை கமாண்டன்ட் கர்னல் பி.என். நாயக், ஐந்து சிறந்த வீரர்களுக்கு பதக்கங்கள், கேடயங்களை வழங்கி கௌரவித்தார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்நிகழ்ச்சிக்கு ராணுவ வீரர்களின் பெற்றோர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: உலக வரைபடத்தை மாற்றியமைத்த வீரர்களுக்கு வெற்றி தின வாழ்த்துகள் தெரிவிக்கும் தலைவர்கள்