நீலகிரி: தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் உறி அடித்து, பழங்குடியினர்களின் பாரம்பரிய இசை நடனத்துடன் நேற்று (ஜன. 17) பொங்கல் பண்டிகை களைகட்டியது. இதில் வளர்ப்பு யானைகளுக்கு பிடித்த உணவு வகைகள் வழங்கப்பட்டன.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழா உலகத்தில் உள்ள தமிழர்களால் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் வனத்துறையினர் மற்றும் பழங்குடியினர் மக்களால் பொங்கல் விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டது.
இந்த பொங்கல் விழாவில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இதில் கலந்து கொண்டனர். பழங்குடியினர் மக்களின் பாரம்பரிய இசையுடன் பொங்கல் விழா தொடங்கியது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் உட்பட அனைவரும் உறியடித்தல் போட்டியில் பங்கேற்ற வெற்றி பெற்றனர்.
இதனைத்தொடர்ந்து அங்குள்ள பழங்குடியினர் மக்களின் பாரம்பரிய இசையுடன் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருணா, காவல் துறை கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் உட்பட சுற்றுலா பயணிகள் நடனமாடி மகிழ்ந்தனர். இந்நிலையில், அலங்காரம் செய்யப்பட்டு அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வளர்ப்பு யானைகளுக்கு மிகவும் பிடித்த பொங்கல், அண்ணாச்சி, கரும்பு, தேங்காய் போன்ற பழங்களுடன் உணவு வழங்கப்பட்டது.
பின்னர், சுற்றுலா பயணி உட்பட அனைவருக்கும் வனத்துறை சார்பில் பொங்கல் வழங்கப்பட்டது. சிறப்பாக நடைபெற்ற இந்த விழாவில் வனத்துறையினர், சுற்றுலா பயணிகள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர். மேலும் பழங்குடியினர் இசைக்கருவிகளைக் கொண்டு இசைத்தவாறு நடனம் ஆடினர். இவர்களுடன் சுற்றுலா பயணிகளும் இசைக்கேற்றவாறு நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க: Madurai Alanganallur Jallikattu : உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! என்னென்ன சிறப்புகள் இருக்கு?