பன்னாட்டு யானைகள் தினம் இன்று (ஆகஸ்ட் 12) கொண்டாடப்பட்டு வருகிறது. முதுமலைப் புலிகள் காப்பகத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த வளர்ப்பு யானைகள் முகாமில் கரோனா தொற்று காரணமாக பொலிவிழந்த நிலையில் யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.
இதில், 27 வளர்ப்பு யானைகள் பங்குபெற்றன. அவைகளுக்கு ஆப்பிள், கரும்பு, மாதுளை உள்ளிட்ட 15 வகையான சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற கருத்தரங்க நிகழ்வில், வனத்துறை ஊழியர்கள் லண்டான செடி மூலம் தயாரித்த யானை உருவங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.
அதை உருவாக்கிய வனத்துறை ஊழியர்களுக்கு பரிசுகளும் தரப்பட்டன. விழா குறித்து செய்தியாளர்களிடம் துணை கள இயக்குநர் செண்பக பிரியா பேசுகையில், "முதுமலையில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாம் ஆசியாவிலேயே பழமை வாய்ந்த வளர்ப்பு யானைகள் முகாம். 110 ஆண்டுகளாக இந்த முகாம் செயல்பட்டு வருகிறது.
மேலும், முதுமலைப் புலிகள் காப்பகத்தில் 600 காட்டு யானைகள் உள்ளன. அதனால், காடுகள் செழிப்பாக உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் மட்டும் சுமார் 6 ஆயிரம் காட்டு யானைகள் இருக்கின்றன" என்றார்.
இதையும் படிங்க: 80% உயிரற்ற நிலையில் கிடந்த யானைக் குட்டியை காப்பாற்றிய மருத்துவர் - யார் இந்த யானை டாக்டர்?