நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வனப்பகுதிகள் பசுமையான சூழலிலிருந்து வறட்சியான சூழலுக்கு மாறிவருகிறது.
இதனால் வனப்பகுதி அருகே உள்ள அருவிகள், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோர அருவிகள் தண்ணீரில்லாமல் வறண்டு காணப்படுகின்றன.
அருவிகள், சிற்றோடைகள் என நீர்நிலைகள் அனைத்தும் வறண்டுவருவதால் யானை, காட்டெருமை காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீரைத் தேடி சாலையோரங்கள், நகர்ப்பகுதிகள், குடியிருப்புப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.
தற்போது கோடை காலத்தின் ஆரம்பகட்டத்திலேயே வெயில் அதிகரித்துவருவதால், வன விலங்குகளின் தண்ணீர் தேவைக்காக முதுமலையில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று குன்னூர் பகுதியிலும் தண்ணீர்த் தொட்டிகள் அமைத்து குடிநீர் நிரப்பும் பணியில் வனத் துறையினர் ஈடுபட வேண்டும் என அனைவரும் கோரிக்கைவிடுக்கின்றனர்.