நீலகிரி மாவட்டம், உதகையில் பழங்கால கார்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 15ஆவது பழங்கால கார்கள், இருசக்கர வாகனங்களின் அணிவகுப்பு மற்றும் கண்காட்சி இன்று நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். இந்தக் கண்காட்சியில் 1928ஆம் ஆண்டு முதல் 1961ஆம் ஆண்டு வரையில் உற்பத்தி செய்யப்பட்ட பழங்கால கார்கள், இருசக்கர வாகனங்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த கார்களின் அணிவகுப்பானது தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையில், இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக அணிவகுத்து வந்தது பார்வையாளர்கள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
இதில் ஆஸ்டின், டார்ஜ் பிரதர்ஸ், பிளைமவுத், பென்ஸ், மோரீஸ், ஹில்மேன், லேண்ட்ரோவர், ஹெரால்ட், வேன்ன்கார்ட், மற்றும் பழங்கால இருசக்கர வாகனங்களான லேம்பர்டா, ரோட் கிங், நார்டன், இன்னோசென்டி, ஜாவா, பாபீ, எல்.டி உள்ளிட்ட இருசக்கர வாகனங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.