உதகை ராஜ்பவனில் 'தொழில் புரட்சிக்கான புதுமை கல்வி' என்ற உயர் கல்வி மாநாட்டை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கிவைத்தார். இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழ்நாட்டிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம், பாராதியார் பல்கலைக்கழகம், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் உள்பட 20 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த துணை வேந்தர்களும் இந்திய மேலாண்மை கழக பேராசிரியர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
உயர்கல்வி மாநாட்டை தொடங்கிவைத்த பின் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், "தமிழ்நாட்டில் உயர் கல்வி பெரிய வளர்ச்சியடைந்து, பெருமைப்படும்விதமாக உள்ளது. நான் ஆளுநராகப் பதவியேற்றபோது ஆறு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்கள் பதவி நிரப்பப்படாமல் இருந்தது. அதனை நிரப்பியபோது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இரண்டு துணைவேந்தர்கள் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதும் பதிவாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதும் கவலையளிக்கிறது. நான் பொறுப்பேற்ற பிறகு துணைவேந்தர், பேராசிரியர்கள் நியமனத்தில் மாற்றம் செய்யப்பட்டு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுகிறது.
தமிழ்நாடு ராஜ் பவன்களில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல பல்கலைக்கழகங்களிலும் தடைசெய்யபட்ட நெகிழியைப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு கல்லூரியும் ஆண்டிற்கு ஒரு கிராமத்தை தத்தெடுத்து அரசுத் திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: சீமானுக்கு டஃப் கொடுக்குறீங்க நித்தி - செந்தில் குமார் எம்.பி., கலாய்!