நீலகிரி: கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்தத் தேயிலை எஸ்டேட், பங்களாவுக்குள் கடந்த 2017ஆம் ஆண்டு 11 பேர் கொண்ட கும்பல் கொள்ளையில் ஈடுபட்டது. அப்போது அங்கு பணியிலிருந்த இரவு காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது கண்டுபிடிக்கபட்டது. இதில் கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து சயான் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றுவந்தது.
இருவர் கைது
இந்நிலையில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது நண்பர் ரமேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்நிறுத்தினர்.
மேலும் அவர்கள் இருவருக்கும், நவம்பர் 8ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் அளித்து, கூடலூர் கிளை சிறையில் அடைக்க நீலகிரி மாவட்ட நீதிபதி சஞ்ஜை பாபா உத்தரவிட்டார். அதனையடுத்து இருவரும் கூடலூர் கிளை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் இருவருக்கும் கொள்ளைச் சம்பவம் நடைபெறும் முன்பே தகவல் தெரிந்தும் காவல்துறையினரிடம் மறைத்துள்ளனர்.
இதனால் இவர்கள் இருவர் மீதும் சாட்சிகளை மறைத்தல், சாட்சிகளை அழித்தல், சாட்சி சொல்ல விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்