நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள தீட்டுக்கல் தனியார் பள்ளி வளாக வேலி அருகே, சிறுத்தை ஒன்று சுருக்குக் கம்பியில் மாட்டி கிடப்பதாக வனத்துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின் பெயரில் உதவி வன பாதுகாவலர், வனச்சரகர் மற்றும் முதுமலை கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அப்பொழுது சிறுத்தை உயிருடன் இருந்ததால், மயக்க ஊசி செலுத்தி ஆறு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சிறுத்தையை மீட்டுள்ளனர். இருப்பினும், மீட்கப்பட்ட சிறுத்தை சுருக்குக் கம்பியில் மாட்டி தப்பிக்க முயன்ற பொழுது ஏற்பட்ட காயங்களினாலும், உணவு இன்றி கிடந்ததினாலும் சோர்வாகக் காணப்பட்டு உயிரிழந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் தனிப்படை அமைத்து தொடர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், தீட்டுக்கள் பென்ஹில் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரது மகன் பிரசாந்த் குமார் (26) மற்றும் சுப்பையா என்பவரது மகன் மாரி (50) ஆகியோர், காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக வைத்த சுருக்குக் கம்பியில் சிறுத்தை சிக்கியதை ஒப்புக் கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்து, உதகை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தமிழக அரசின் மெத்தனப்போக்கே அமோனியா கசிவுக்கு காரணம் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு