நீலகிரி: மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் அதிகளவில் வசித்துவருகின்றன. இதே பகுதியைச் சேர்ந்த கௌரி, கடந்த ஆண்டு புலி தாக்கி உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து கூடலூர் அருகே உள்ள தேவன் எஸ்டேட் பகுதிக்கு நகர்ந்த புலி, குஞ்சு கிருஷ்ணன், சந்திரன் ஆகிய இருவரை அடித்துக் கொன்றது.
தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் புலி அடித்துக் கொன்றது. இதனால் கடந்த வாரம் புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க கோரிக்கைவிடுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மூன்று வன கால்நடை மருத்துவக் குழுவினர் அடங்கிய வனத் துறையினர், புலியைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
புலியைச் சுட்டுப்பிடிக்க சாலை மறியல்
தேடுதலின்போது ஆட்கொல்லி புலியானது அடர்ந்த புதர்களில் மறைந்துகொண்டு வனத் துறையினருக்குப் போக்குக்காட்டிவந்தது. இந்நிலையில் நேற்று (அக். 1) தேவன் எஸ்டேட் பகுதியிலிருந்து மீண்டும் மசினகுடிக்கு நகர்ந்த புலி, சிங்காரா வனப்பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த மங்களப்பசவன் என்பவரை அடித்துக் கொன்றது.
புலியால் மீண்டும் உயிரிழப்பு நிகழ்ந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அதனைச் சுட்டுப்பிடிக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது புலியைச் சுட்டுப் பிடிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவாணையைக் கண்ட பிறகே, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
தயார் நிலையில் அதிரடிப்படை
இதனையடுத்து பிரத்யேகப் பயிற்சிபெற்ற 20 பேர் அடங்கிய ஐந்து அதிரடிப்படைக் குழுவினர், ஏகே 47 ரக துப்பாக்கிகளுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் மசினகுடி சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மேலும் முதன்முறையாக புலியைத் தேட, அதவை என்னும் மோப்பநாய் கொண்டுவரப்பட்டுள்ளது. புலியைச் சுட்டுப்பிடிக்கும் வரை பொதுமக்கள் யாரும் வனப் பகுதிக்குள் ஆடு, மாடுகள் மேய்க்கச் செல்ல வேண்டாம் என வனத் துறையினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சேற்றில் சிக்கி உயிரிழந்த யானைக்கன்று - பாசப்போராட்டம் நடத்திய தாய் யானை