நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான உதகை உழவர் சந்தை, மார்க்கெட் பகுதிகளை இடமாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி உதகை சேரிங்கிராஸ் பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையை, என்.சி.எம்.எஸ் வாகன நிறுத்தும் இடத்தில் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள், ஊரடங்கு காரணமாக உழவர் சந்தைக்கு குறைந்த எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் வருவதாக தெரிவித்தனர்.
சமூக இடைவெளியுடன் வியாபாரம் செய்து வருவதால், இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என காய்கறி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களுடன் உதகை நகராட்சி ஆணையாளர், காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இரண்டு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து, என்.சி.எம்.எஸ். பகுதிக்கு செல்ல வியாபாரிகள் ஒப்புக்கொண்டனர். அங்கு போதிய பாதுகாப்பு வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க : ’இந்தியா வெளிநாட்டிடம் கையேந்தும் நிலைக்கு மத்திய அரசுதான் காரணம்’