நீலகிரி: குன்னூரில் தற்போது பகல் நேரங்களில் மிதமான வெயிலும், இரவு நேரங்களில் அதிக குளிரும் உள்ளதால், இந்த காலநிலையை அனுபவிக்க வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
மேலும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் என தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, லாம்ஸ் ராக், டால்பின் நோஸ் ஆகியப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இருப்பினும் குன்னூரில் குறிப்பாக நீலகிரி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வந்த மலை ரயிலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்கின்றனர். அதேபோல குன்னூர் - உதகை இடையேயான மலை ரயிலிலும் சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
எனினும், தற்போது மீண்டும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.
இதையும் படிங்க: குட்டி கோவாவாக மாறும் புதுச்சேரி.. சுற்றுலா வளர்ச்சியா? கலாச்சாரா சீர்கேடா?