நீலகிரி இயற்கை விவசாய மாவட்டமாக கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசால் அறிவிக்கபட்ட நிலையில், இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடத்தில் கொண்டு செல்வதற்காக தோட்டக் கலை துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு 50 விழுக்காடு மானியமும் வழங்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற பேரணியில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். உதகை மத்திய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணியினை மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்டவைகள், 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
விளைச்சலை பெருக்குவதற்கு விவசாயிகள் ரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்துவதால், மண் வளம் பாதிக்கப்படுகிறது. மேலும், ரசாயன உரங்கள் மூலம் விளைவிக்கப்படும் காய்கறிகளை உட்கொள்ளும் மக்களுக்கு பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயமும் உள்ளது. இதை முன்னிறுத்தி நடைபெற்ற இப்பேரணியில் இயற்கை விவசாயம் செய்வதன் பயன்கள் குறித்தும், ரசாயன மருந்துகளை பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்தும் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு விவசாயிகள் கோஷங்களை எழுப்பி பேரணியாக சென்றனர்.