கூடலூர் பஜாரில் அரசு காலி நிலத்தை போலி ஆவணங்களைக் கொண்டு ஆக்கிரமித்து கட்டடம் கட்டி பல ஆண்டுகளாக வருமானம் ஈட்டி வருவதாக, கட்டட உரிமையாளர் மீது மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் வந்ததுள்ளன.
இதனை ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகம் அந்தக் கட்டடம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என உறுதி செய்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 4 ஆம் தேதி அக்கட்டடத்திற்கு சீல் வைக்க வருவாய்துறையினர் சென்றபோது கட்டட உரிமையாளர் குடும்பத்துடன் உள்ளே அமர்ந்து சீல் வைக்கவிடாமல் எதிர்ப்பு தெரிவித்து தடுத்தார்.
மீண்டும் அடுத்த நாள் காலை கட்டடத்திற்கு சீல் வைக்கச் சென்ற போதும் இதேபோல் குடும்பத்துடன் கடைக்குள் அமர்ந்து சீல் வைப்பதை தடுத்தார். இதனையடுத்து இன்று காலை 6 மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் கூடலூர் கோட்டாசியர் கட்டடத்துக்கு மீண்டும் சீல் வைக்கச் சென்றார். மீண்டும் அங்கு வந்த கட்டட உரிமையாளர் அவர்களைத் தடுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இருப்பினும் போலீசாரின் உதவியுடன் கட்டடத்திற்கு சீல் வைக்கப்பட்டு, இது அரசுக்கு சொந்தமான இடம் என பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கோட்டாச்சியர் கூறுகையில், 'இது அரசு இடம் என்று பல்வேறு புகார் வந்த நிலையில் அந்த நிலத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்யும்போது இது அரசு நிலம் என்பது தெரிய வந்தது. மேலும் கூடலூர் நகராட்சி சார்பாக பணத்தைப் பெற்றுக் கொண்டு கதவு எண் கொடுத்ததும், மின் வாரியம் மின் இணைப்பு கொடுத்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என அவர் தெரிவித்தார்.