நீலகிரி: அரசு தேயிலைத் தோட்டங்கள் நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவு உள்ளன. இங்குள்ள கூடலூர், பாண்டியாறு, நெல்லியாளம், சேரம்பாடி, சேரங்கோடு, கொளப்பள்ளி, கோத்தகிரி, நடுவட்டம், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டங்களில் (டேன்டீ) நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்களாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
அந்த வகையில், நெல்லியாளம் அரசு தேயிலைத் தோட்டத்தில் வள்ளியம்மாள் (60) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல தேயிலைத் தோட்டத்திற்கு தேயிலைப் பறிக்கச் சென்றுள்ளார். அப்போது இவரை புலி தாக்கி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் அப்பகுதியில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த துர்கா (53), சரிதா (29) ஆகிய இருவரையும் மீண்டும் புலி தாக்கியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து, அவர்களையும் மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. இதைத் தொடர்ந்து, புலி தாக்கியது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கூடலூர் பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் தாக்குதல் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: பொன்முடி சொத்துக்கள் முடக்கம் - சிறப்பு நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!