நீலகிரி மாவட்டம் உதகை அருகே சின்ன குன்னூர் பகுதியில் மலை காய்கறி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவர் தனது தோட்டத்தில் வனவிலங்கு நுழைவதை தடுக்க சட்டவிரோதமாக மின் வேலி அமைத்துள்ளார்.
இந்நிலையில் தோட்டத்தில் காய்கறி சாப்பிட நுழைந்த ஆண் காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனையறிந்த தோட்ட உரிமையாளர், மின்சாரம் தாக்கி 20 வயது ஆண் யானையை தனியார் தோட்டத்தில் யாருக்கும் தெரியாமல் இரவேடு இரவாக புதைத்துள்ளார்.
அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் சின்ன குன்னூரை சேர்ந்த விக்னேஷ்வரன், கோபாலகிருஷ்ணன், அஜீத்குமார் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இறந்த யானையை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்ய வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு 1.35 லட்சம் கோடி ரூபாய் கடன் - மத்திய நிதியமைச்சகம்