குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், போராட்டம் நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பேரணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் இந்து முன்னணி, பாஜக, அனைத்து இந்து சமுதாய கூட்டமைப்பு ஆகியவை சார்பில் பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தொடங்கிவைத்தார். இதில் பாஜக தேசிய இளைஞரணி துணைத் தலைவர் முருகானந்தம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். குன்னூர் பெட்போர்டு பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணி மவுண்ட் ரோடு வழியாகப் பேருந்து நிலையம் அடைந்தது. இதில் தேசிய கொடிகளை ஏந்தி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியவாறு பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதனையொட்டி அசம்பாவிதங்களை தடுக்க நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பின்பு பொதுக்கூட்டம் நடந்தது. இதனையொட்டி குன்னூர் பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
இதையும் படிங்க : டெண்டரில் முறைகேடு - துப்புரவு பணியாளர்கள் சமையல் பாத்திரங்களுடன் தர்ணா