நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல வனப்பகுதி அருகேயுள்ள வாழைத்தோட்டம், மாவனல்லா ஆகிய கிராமத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஓன்று தும்பிக்கையில் காயத்துடன் இப்பகுதிக்கு வந்தது. பத்து வருடமாக மக்களை எவ்வித இடையூறும் செய்யாமல் இந்த கிராமங்களில் உலா வந்த இந்த யானைக்கு 'ரிவால்டோ' என்ற பெயர் சூட்டினர்.
இந்நிலையில் சில மாத காலமாக இந்த யானை குணத்தில் மாற்றம் ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தியும், வீடுகளை இடித்து நாசம் செய்தும் வருகிறது. இந்த யானையால் மக்களுக்கும், மக்களால் யானைக்கும் ஆபத்து ஏற்படும் அச்சம் உள்ளது. இதனால், இந்த யானையை பிடித்து முதுமலை யானைகள் முகாமில் வைத்து பராமரிக்க அப்பகுதி மக்கள், வனவிலங்கு ஆர்வலர்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, வனத்துறையினர் முதன்முறையாக யானைக்கு மயக்க ஊசி செலுத்தாமல், கும்கி யானைகள் உதவி இல்லாமல், பழங்குடியினர் வேட்டை தடுப்பு காவலர்கள் உதவிடன் யானையை பிடித்து வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். ஆனால், வனத்துறையினரின் முதல் கட்ட முயற்சி தோல்வி அடைந்தது. பின்னர் கும்கி யானைகள் உதவிகளுடன் மயக்க ஊசி செலுத்தி யானை பிடிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், "தற்போது பிடிக்கப்படும் இந்த யானையை முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் வைத்து பராமரிக்க வேண்டும். இல்லையெனில் யானை மீண்டும் இப்பகுதிக்கு வரும் அபாயம் உள்ளது" என்றனர். இதே பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒற்றை ஆண் காட்டு யானையை தனியார் விடுதி உரிமையாளர் ஒருவர் தீ வைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வன பாதுகாவலனின் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்?