நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள பெத்தளா கிராமத்தில், மிகவும் பிரசித்திபெற்ற ஹெத்தையம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள மூன்று பூசாரிகளை மாற்ற வேண்டும் என 19 கிராமங்களைச் சேர்ந்த ஒரு தரப்பினர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், பூசாரி குடும்பத்தினர், அவரது ஆதரவாளர்களாக உள்ள மற்றொரு தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், சுமுக தீர்வு ஏற்படாததால் 19 ஊர் தலைவர் ரங்கா கவுடர் தலைமையில் பூசாரிகளை மாற்ற வேண்டும் எனக்கூறி சுமார் 300 க்கும் மேற்பட்டோர் தீடீரென கோத்தகிரி-குன்னூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானமடையாத கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அல்லது உதவி ஆட்சியர் வந்து பூசாரிகளை மாற்றுவதாக உறுதியளித்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவதாக கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த குன்னூர் உதவி ஆட்சியர் ரஞ்சித் கைக்கார் சீமையின் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இப்போராட்டத்தினால், குன்னுார் கோத்தகிரி சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.