கூடலூர் அருகேயுள்ள மங்குழி பகுதியைச் சேர்ந்தவர்கள் முஜீப் ரஹ்மான் – சபியா தம்பதி. இவர்களது மகள்களான சப்னா ஷெரின் – சம்னா ஷெரின் ஆகியோர்கள் இரட்டையர்கள்.
சிறுவயது முதலே தடகளப் போட்டிகளில் ஆர்வமிக்க இவர்கள் இருவரும் ஈரோட்டில் உள்ள அரசு விளையாட்டு விடுதியில் தங்கிப் படித்துவருகின்றனர்.
தாய்-தந்தை இருவரும் கூலி வேலைசெய்து இருவரையும் படிக்கவைத்து-வருகின்றனர். கூடலூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்தபோது அப்பள்ளியின் ஆசிரியர் இவர்களது திறமையைக் கண்டறிந்தார்.
அவரது முயற்சியால் ஈரோட்டில் உள்ள அரசு விளையாட்டு தங்கும் விடுதியில் இருவரும் சேர்க்கப்பட்டனர். விளையாட்டு விடுதியில் சேர்ந்த பின்னர் இருவரது கனவு நிறைவேறத் தொடங்கியது.
மாவட்ட, மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற இருவரும் பல வெற்றிகளைக் கண்டு, பின்னர் தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தேர்வுபெற்றார்கள்.
சப்னா ஷெரின் இதுவரை நான்கு தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார். 1500 மீட்டர் ஓட்டத்தில் தேசிய அளவில் பஞ்சாப், சத்தீஸ்கர், டெல்லி, மும்பையில் நடந்த போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள சப்னா ஷெரின் குறைந்த நேரத்தில் இலக்கை எட்டி சாதித்துள்ளார்.
இதன்மூலம் கேலோ இந்தியா போட்டிக்குத் தேர்வாகியுள்ளார். அதேபோல சம்னா ஷெரின் இதுவரை இரண்டுமுறை தேசிய அளவிலான தடை தாண்டும் ( HURDLES ) போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார்.
இருவரும் அடுத்த வாரம் மும்பையில் நடக்கவுள்ள தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க செல்ல இருக்கிறார்கள். தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற பின்னர், சர்வேதேச போட்டிகள், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதே தங்களது லட்சியம் என இரட்டை சகோதரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இவர்களின் ஏழ்மை, குடும்ப நிலை இவர்களது கனவைத் தொடர முடியால் தடுத்துவருவதாக இரட்டை சகோதரிகளின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். மாணவிகளின் தாயான சபியா 1994ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் பெற்றிபெற்றவர்.
தன்னால் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலையில், தனது கனவை மகள்கள் மூலம் நிறைவேற்றிவருவதாகக் கூறியுள்ளார். தேசிய அளவிலான போட்டிகளில் தனது மகள்கள் பங்கேற்கும்போது அதற்கான செலவுகளுக்கு வெளியில் கடன்களை வாங்கியே சமாளித்துவருவதாக அவர் வேதனையுடன் கூறுகிறார்.
அதேபோல மகள்களுக்குத் தேவையான காலணிகள் உள்ளிட்ட விளையாட்டு தொடர்பான பொருள்களை வாங்க தனக்கு போதுமான வசதி இல்லை என அவர் கூறியுள்ளார். எனவே அரசு தனது மகள்களுக்கு தேவையான உதவிகளை செய்தால் நிச்சயம் நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய நிலைக்கு வருவார்கள் என தாய் சபியா கூறியுள்ளார்.
மாணவிகளுக்கு அரசு தேவையான உதவிகளை செய்துகொடுக்க வேண்டுமென அவர்களின் திறமையை கண்டறிந்த ஆசிரியர், ஊர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.