நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை தொழில் உள்ளது. இதில் சுமார் 60 ஆயிரம் சிறு குறு விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு, டஸ்ட், இலை ரகங்கள் மட்டுமே பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.
தேயிலை தொழிலை மேம்படுத்தவும், சிறப்பு தேயிலை துாள் தயாரித்து வழங்க ஊக்குவிக்கப்படுகிறது. மேலும், தேயிலையுடன் பல பொருள்கள் சேர்ப்பதால் பல்வேறு மருத்துவ குணம் வாய்ந்ததாக உள்ளது.
வானவில் வர்ணங்களில் தேயிலை தூள் தயாரிப்பு:
இந்நிலையில், குன்னுார் சேலாஸ் அருகேவுள்ள தனியார் தொழிற்சாலையில், வானவில் வண்ணங்களில் தேயிலை தூள்கள் தயாரிக்கப்படுகிறது.
இதில், கிரீன் டீ, ஒயிட் டீ, புளூ டீ, பர்ப்பிள் டீ, மஞ்சள் டீ, ரெட் டீ, உள்ளிட்டவையும், அஸ்வகந்தா, ஊலாங், காடா, காசா, செவன்த் ஹெவன் என்ற பெயர்களிலும் நறுமணம் அடங்கிய சுவையான தேயிலை தூள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தத் தேயிலை, ஐப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறைந்தபட்சமாக கிலோ 2 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இதனை, அதிக விலை கொடுத்து வாங்க முடியாத சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்காக, சிறியளவிலான பாக்கெட்களில் விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால், சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்போன ஒரு கிலோ தேயிலைத் தூள்!