நீலகிரி மாவட்டத்தில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். அதுமட்டுமின்றி 120 தனியார் தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. தற்போது தேயிலைக்கு நல்ல விலை கிடைத்து வரும் நிலையில், கரட்டு தேயிலை பயன்படுத்தினால் தேயிலை தூள் தரம் குறையும் அபாயம் ஏற்பட்டது.
இதனால் கடந்த மாதம், கரட்டு இலை பயன்படுத்தியது உள்பட பல்வேறு விதிமுறைகளைப் பின்பற்றாத 109 தேயிலை தொழிற்சாலைகளுக்குத் தேயிலை வாரியம் 'ஷோகாஸ் 'நோட்டீஸ்' வழங்கியது. இதனையடுத்து தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் இந்திய தேயிலை வாரியத்தின் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற முடிவுசெய்தனர்.
இதன் ஒருபகுதியாக வாரிய விதிமுறைகளான 65 சதவீதம் கொழுந்து இலை, 35 சதவீதம் வாஞ்சி இலைகளுடன் 5 சதவீதம் மட்டுமே கரட்டு இலைகள் என்ற விதிமுறையை பின்பற்ற முடிவு செய்தது. இந்த வழிமுறைகளைப் பின்பற்றி குன்னூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் தேயிலை தொழிற்சாலைகள் இலைகளை பெற்றுவருகின்றன.
இந்நிலையில், கோத்தகிரி பகுதிகளில் உள்ள விவசாயிகள், கடந்த 10 நாள்களாக தேயிலை தொழிற்சாலைகள் விவசாயிகள் வழங்கும் தேயிலையை கொள்முதல் செய்யாமல் தவிர்த்தன. இதனால் கொதுமுடி, பேரகனி உள்பட கோத்தகிரியில் இருந்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தேயிலை வாரிய அலுவலகத்திற்கு வந்தனர்.
ஆனால் தேயிலை வாரியத்தில் இருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளதால் அனைவரையும் அனுமதிக்க முடியாது எனக் காவல் துறையினர் தெரிவித்தனர்.
தொடர்ந்து குறிப்பிட்ட 4 விவசாயிகள் வாரிய அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 5 சதவீத கரட்டு தேயிலையில் சிறிய தளர்வு அளித்து வரும் 15 நாள்களுக்கு வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.