சுற்றுலாத் தலங்களை மூடுவதைத் தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், 50 விழுக்காடு சுற்றுலாப் பயணிகள் மாவட்டத்துக்கு வர அனுமதிக்க வேண்டும், நிதி நிறுவனங்கள் தவணைத்தொகை செலுத்த கால அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாடகை கார் ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று (ஏப். 19) முற்றுகையிட்டனர்.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும்விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. குறிப்பாக நாளை (ஏப். 20) முதல் அனைத்துப் பூங்காக்களும் மூடப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களும் மூடப்படும் எனத் தெரிகிறது.
சுற்றுலாத் தலங்களை மூடினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி உதகையில் உள்ள நூற்றுக்கணக்கான டாக்சி ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று காலை முற்றுகையிட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட டாக்சி ஓட்டுநர்கள், கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் தாங்கள் மீண்டு வரவில்லை என்றும், அதற்குள் இரண்டாவது முறையாக சுற்றுலாத் தலங்களை மூடினால் தங்களது தொழில் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறினர்.
தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் ஸ்டாலின் நடைப்பயிற்சி: உலா வரும் காணொலி!