நீலகிரி மாவட்டம் குன்னூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அரசு தேயிலைத் தோட்டக் கழகத்தில் (டான் டீ) 350-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த மாதம் 24ஆம் தேதியிலிருந்து பசுந்தேயிலை பறிப்பது, தேயிலை உற்பத்தி ஆகியவை நிறுத்தப்பட்டது.
இதன் விளைவாக நிர்வாகம் நிதியை காரணம் காட்டி ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து 14ஆம் தேதி வரையிலான சம்பளம் வழங்கப்படாது என தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நேற்று உற்பத்தி தொடங்குவதாக நிர்வாகம் அறிவித்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சம்பளம் வழங்கக்கோரி பணியைப் புறக்கணித்து தொழிற்சாலை வெளியே நின்று சமூக இடைவெளியுடன் போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து காவல் துறையினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, சம்பளம் விவகாரம் குறித்து அரசுக்குத் தெரிவிப்பதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, சம்பளம் விவகாரம், தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கான சாலை, நடைபாதை, கழிப்பிடம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கும் தீர்வு காணாவிட்டால் அடுத்த மாதம் உண்ணாவிரதம் இருக்க முடிவுசெய்துள்ளதாகவும் தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: பசி எனும் நெருப்பு வளையத்திற்குள் சிக்கித் தவித்துவரும் கலைக் கூத்தாடிகள்!