நீலகிரி: மாவட்டத்தில் சீகூர், சிங்காரா பகுதிகளில் யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ளதாகவும் அதில் சிலர் விதி மீறி தனியார் தங்கும் விடுதிகளை நடத்தி வருவதாகவும் கடந்த 2008ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில் யானை வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை காலி செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து தனியார் விடுதி உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் விடுதிகளை சீல் வைக்க உத்தரவிடப்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து 38 தனியார் விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தனியார் விடுதி உரிமையாளர்கள் நீலகிரி மாவட்ட நிர்வாகம் யானைகள் வழித்தடம் குறித்து தவறான தகவல்களை அளித்து உள்ளதாக கூறினர்.
இதனையடுத்து யானைகள் வழித்தட பிரச்சினையை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் 3 பேர் கொண்ட சிறப்புக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
இந்த குழு முதற்கட்டமாக யானைகள் வழித்தடமாக அறிவிக்கப்பட்ட இடத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நேரில் ஆய்வு செய்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று (அக்.9) ஆய்வு செய்துள்ளது.
இதையும் படிங்க: 3,000 கிலோ ஹெராயின்: சென்னையில் 10 மணிநேரமாக தொடரும் என்ஐஏ ரெய்டு