நீலகிரி மாவட்டம் உதகை சந்தை, மெயின் பஜார், காந்தல் ஆகிய பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட மீன் விற்பனை கடைகள் உள்ளன. இந்த மீன் விற்பனை கடைகளிலிருந்து, உதகை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ளவர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் மீன்களை வாங்கி செல்வது வழக்கம்.
இந்த விற்பனை நிலையங்களில் அழுகிய மீன்கள் விற்கப்படுவதாக தொடர்ந்து வந்த புகாரை அடுத்து மீன் வளத்துறை, உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுகாதாரமற்று இருந்த கடைகளின் உரிமையாளர்களிடம், இதே நிலை தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மீன்வளத்துறை அலுவலர் கொளசல்யா, “பல இடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீன்களை ஆய்வு செய்தோம். சுமார் 50 கிலோவுக்கு மேற்பட்ட அழுகிய, தரமற்ற மீன்களை பறிமுதல் செய்திருக்கின்றோம். தொடர்ந்து சுகாதரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்தால் மீன் விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, அவர்களது விற்பனை உரிமத்தையும் நீக்கம் செய்யவும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்திற்கு கேரளாவிலிருந்து அதிகபடியான மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு கொண்டு வரப்படும் மீன்களை தொடர்ந்து ஆய்வு செய்யப்படும்” என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைவு!