உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடபட்டது. அப்போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அனைத்து கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இன்னசென்ட் திவ்யா, "நீலகிரி மாவட்டத்தில் மொத்தமாக 5.66 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். முந்தைய வரைவு வாக்களர் பட்டியலை விட தற்போது 3,299 வாக்காளர்கள் குறைவாகவுள்ளனர். மேலும் வனபகுதிக்குள் அமைந்துள்ள கிராம மக்கள் உள்ளாட்சித் தேர்தலின்போது வாக்குச்சாவடிக்கு வந்து செல்ல வாகன வசதி செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், "உள்ளாட்சித் தேர்தலுக்காக நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள 65 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாகவும், 1 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானதாகவும் கண்டறியபட்டுள்ளது. தேர்தலுக்காக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது. குறிப்பாக எல்லை ஓரத்தில் மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் இருப்பதால் 16 சோதனை சாவடிகளிலும் 11 காவல் நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்படும். பதற்றமான வாக்குசாவடிகளில் உள்ளூர் காவல் துறையினருடன், சிறப்பு அதிரடி படையினர் மற்றும் ஒரு பட்டாளியன் சிறப்பு காவல் படையினர் என மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்படும்" என்றார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க முடிவு - வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு!